தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாஜக அதிமுக கூட்டணி இருந்தால் 31 முதல் 35 இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என வேலுமணி கூறி இருப்பது, அவருக்கும், எடப்பாடிக்கும் உள்ள உள்கட்சி பூசலை காட்டுகிறது.
அதிமுக பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. அதிமுக தலைவர்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் இந்த தேர்தல் தந்த பாடம். எஸ்டிபிஐ போன்ற குரூப்களுடன் கூட்டணி் வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்தால் இப்படித்தான் வரும். கோவை மக்களவை தொகுதியில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் இப்போது அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. கோவை மக்கள் அதிமுகவை நி்ராகரித்து விட்டனர். கூட்டணியில் இருந்தால் ஒரு பேச்சு, இல்லாவிட்டால் ஒரு பேச்சு என அதிமுகவினர் பேசுகிறார்கள்.
பாஜக தொண்டர்கள் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம். திமுக காரனுக்கு என் மீது கோபம் இருந்தால் என்மீது கை வையுங்கள். அண்ணாமலை மீது கை வையுங்கள். நடு ரோட்டில் வாய் பேசாத அப்பாவி ஆட்டை ஏன் வெட்டுகிறீர்கள். பாஜகவிற்கு காலம் வரும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொதுமக்களை விடுவார்களா, அங்கு முகவர்கள் தான் போவார்கள். வேலுமணி தவறான புள்ளிவிவரங்களை தருகிறார். கோவையில் இத்தனை வருடமாக நடக்காததை நாங்கள் நடத்திக்காட்டுவோம். 10 வருடமாக அதிமுக ஆட்சியில் நடந்ததை நாங்கள் சொல்லுவோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அதிமுக ஊழலை வெளிக்கொண்டு வருவோம். அது எங்கள் சங்கல்பம். தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்து உள்ளனர்.்
வேலுமணி அண்ணன் அவரது அரசியல் அறிவை மீண்டும் சுயபரி்சோதனை செய்து கொள்ள வேண்டும். 11.5 % என்பது எங்களின் வளர்ச்சி. அதிமுகவின் கோட்டை என்ற இடத்தில் மயிரிழையில் தான் அவர்கள் டெபாசிட் வாங்கி உள்ளனர். அடுத்த தேர்தல் இருமுனை போட்டியாக மாறும். ஆளுங்கட்சி இடர்பாடுகளை தாண்டி வாக்களித்து இருக்கிறார்கள். பாஜக மீது வைத்திருக்கும் நம்பி்க்கைக்காக நாங்கள் இரண்டு மடங்கு உழைப்போம். நாங்கள் சரியான பாதையில் தான் செல்கிறோம் என கோவை மக்கள் சொல்லி இருக்கிறார்கள்.
என்னுடைய செயல்பாடு தான் பாஜக இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. இரட்டை இலக்க சதவீதம் பெற்றுள்ளது என நான் சொல்கிறேன். எங்களுடைய செயல்பாடு தான் அதிமுகவை பின்னுக்கு தள்ளி உள்ளது என நான் சொல்கிறேன். தமிழகத்தில் 2026ல் கூட்டணி ஆட்சி தான். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். கூட்டணி ஆட்சியைத்தான் மக்கள் பார்க்கப்போகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.