ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன், சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்தது. அங்கு கடந்த 5 முறையாக நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளகட்சியின் ஆட்சி்நடக்கிறது. இந்தியாவிலேயே மிக அதிகமாக முதல்வர் பதவியை தொடர்ந்து வகித்தவர் சிக்கிம் மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங். (24 வருடன்165 நாள்). இவருக்கு அடுத்தபடியாக நவீன் பட்நாயக் அதிக வருடம் முதல்வராக இருந்தவர்(24 வருடம்71 நாள்) என்ற பெருமையுடன் இருந்தார். 6வது முறையாகவும் முதல்வர் ஆகலாம் என்ற கனவுடன் இருந்தார். ஆனால் அந்த கனவு இந்த தேர்தலில் கலைந்து போய்விட்டது.
147 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கும் நடைபெற்ற தேர்தலில் பாஜக 78 தொகுதிகளிலும், பிஜேடி 51 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் வென்றது. இதன் மூலம் ஒடிசாவில் ஆட்சியை இழக்கிறார் 5 முறை தொடர்ச்சியாக முதல்வராக இருந்த நவீன் பட்நாயக். பாஜக அங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. நவீன் கட்சியும் காங்கிரசும் சேர்ந்தால் கூட அங்கு கூட்டணி ஆட்சி அமைக்க முடியாத நிலையில் நவீன் தோல்வியை சந்தித்து உள்ளார். இதுபோல மக்களவை தேர்தலிலும் நவீன் பட்நாயக் கட்சி xஒரு இடத்தைக்கூட பெறமுடியாதபடி படுதோல்வியை சந்தித்தது.
இந்த அதிர்ச்சி தோல்விக்கு தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியனும் ஒரு காரணம், நவீன் பட்நாயக் 2வது காரணம். மூன்றாவது முக்கிய காரணமாக பாஜக கையாண்ட பிரிவினை வாத பிரசாரம்.
வழக்கமாக பாஜக மற்ற மாநில கட்சிகளை பிரிவினை வாதிகள் என்று குற்றம் சொல்லும். குறிப்பாக தமிழ்நாட்டுக்கு வந்தால் திமுகவை குறிவைத்து இந்த பிரசாரத்தை செய்யும். வடக்கு , தெற்கு என்று திமுக பிரிவனை வாதம் பேசுகிறது என்பார்கள்.
ஆனால் கடந்த மாதம் ஒடிசாவில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி தமிழகத்தை சேர்ந்த வி.கே. பாண்டியனை குறிவைத்து தாக்கினார். பூரி ஜெகநாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவி தொலைந்து விட்டது. அந்த சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது என பாண்டியனை பெயர் சொல்லாமல் தாக்கினார். அத்துடன் பாண்டியனை தாக்கி, தமிழ் கலாச்சாரங்களை தாக்கி பாஜக அங்கு விளம்பரம் செய்தது.
இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலே சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒடிசா மக்களை ஒரு தமிழன் ஆள வேண்டுமா? ஒடிசா மக்களை இங்குள்ள ஒடிசா மக்கள் தான் ஆள வேண்டும் என்றார். இந்த பி்ரசாரம் தான் அங்கு பெரிதும் எடுபட்டது. ஒடிசாவை ஆள ஒடிசாவில் யாரும் இல்லையா என்று பாஜக எழுப்பிய கேள்வி ஒடிசா மக்களின் மனதில் வேலை செய்தது. அதன் விளைவு பாஜகவுக்கு வாக்குகள் திரும்பியது.
பாஜகவின் இந்த கேள்வி மக்கள் மனதில் வேலை செய்கிறது என்பதைக்கூட நவீன் பட்நாயக்கும், பாண்டியனும் புரிந்து கொள்ள காலதாமதமாகி விட்டது. அதற்குள் தேர்தலும் முடிந்து விட்டது. அதன் பிறகு பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை என நவீன் கூறினார். காலதாமதமான இந்த பதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
பாஜக தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழ்நாட்டைப்பற்றியும், தமிழையும் புகழ்வார்கள். ஆனால் ஒடிசாவில் தமிழர்களை தரக்குறைவாக பேசியதால் தான் அவர்களுக்கு வெற்றியே வயப்பட்டது. நவீன் என்ற ஒரு பெரிய அரசியல் ஆளுமையை பிரிவினைவாதம் வேரோறு சாய்த்து விட்டது.
24 வருடங்கள் ஆண்டபோதும் அவரது மேல் எந்த குறையும் சொல்லமுடியவில்ைலை. ஆனால் தமிழன் வி.கே. பாண்டியன் உருவத்தில் நவீனுக்கு இறங்குமுகம் வந்து உள்ளது. இன்னும் 5 வருடம் போனால் ஒடிசா மக்கள் உண்மை நிலையை புரிந்து கொள்ளும் காலம் வரும் என நவீன் கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.