18வது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 292 இடங்களை பிடித்தது. கடந்த தேர்தலை விட அந்த அணிக்கு 61 தொகுதிகள் குறைவாக கிடைத்துள்ளது. இதனால் பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. அதே நேருத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நி்லையில் மெஜாரிட்டி பெற்றுள்ளது.
அதே நேரத்தில் இந்தியா கூட்டணி இந்த தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு 91 எம்.பிக்கள் மட்டுமே இருந்த நிலையில் இப்போது 234 எம்.பிக்கள் உள்ளனர். அதாவது இந்த முறை 143 எம்.பிக்களை இந்தியா கூட்டணி கூடுதலாக பெற்று சாதனை படைத்துள்ளது. இன்னும் 38 எம்.பிக்கள் கிடைத்தால் ஆட்சி அமைத்து விடலாம் என்ற நிலையில் இந்தியா கூட்டணி உள்ளது.
எனவே இன்னும் சில கட்சிகளை சேர்த்து ஆட்சி அமைக்க சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து இந்தியா கூட்டணி தலைவர்களும் ஆலோசித்து வருகிறார்கள். இதற்காக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) பிற்பகலில் நடக்கிறது. இதற்காக கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. புதிய ஆட்சி அமைப்பதற்கான வழிவகைகள் குறித்தும் ஆலோசிக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டில்லி் புறப்பட்டு சென்றார். அவரை அமைச்சர்கள், நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.