கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா குப்பம் கிராமம் காளிபாளையத்தில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து ஆடுகளை பராமரித்து வருகிறார். வீட்டுக்கு சற்று தொலைவில் இந்த ஆட்டுப்பட்டி உள்ளது. இங்கு இரவு காவலுக்க யாரும் தங்குவதில்லை இதை நோட்டமிட்ட திருடர்கள் நான்கு சக்கர வாகனத்தில் வந்து 18 ஆடு மற்றும் 2 குட்டி ஆடு மொத்தம் 20 ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர். ஆடுகள் சத்தம் போடுவதை கேட்டு ஆட்டின் உரிமையாளர் குணசேகரன் ஆட்டுப்பட்டியில் பார்த்துள்ளார் அதில் 20 ஆடுகளை காணாமல் போனது தெரிய வந்தது.
இது தொடர்பாக க.பரமத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடிச் சென்ற நபர்களை தேடி வந்தனர், இந்நிலையில் தனிப்படையினர் வாகன சோதனையின்போது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த 2 நபர்களை போலீசார் விசாரித்தனர். அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அவர்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நல்லு காலணியை சேர்ந்த சந்துரு (22), பரமத்தி வேலூர், கந்த நகர் பரத் (எ) பரத்குமார்(22) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கடந்த மாதம் 8ம் தேதி காளிபாளையத்தில் 20 ஆடுகளை திருடி சென்று விற்றது தெரியவந்தது. பின்னர் அந்த ஆடுகளை திருட பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம், இருசக்கர வாகனம் மற்றும் ஆடுகளை விற்ற பணம் ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை கைப்பற்றினர். பின்னர் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்போது கரூர் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.