அரசு ஊழியர்கள், பென்சனர்கள் பெரும்பாலானோர் ஸ்டேட் பேங்க் மூலமே சம்பளம், ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்.இது தவிர வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் ஸ்டேட் பேங்கில் தான் கணக்கு வைத்து உள்ளனர். இவர்கள் 1ம் தேதி எப்போது வரும், எப்போது பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கலாம் என காத்திருந்து பணத்தை எடுப்பார்கள். ஆனால் முசிறி ஸ்டேட் பாங்க் வளாகத்துக்குள் இருக்கும் ஏடிஎம்மில் 1ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்ற ஒரு பென்சனர் பணம் இல்லாமல் திரும்பி சென்றார்.
ஸ்டேட் பாங்க் அமைந்துள்ள அதே துறையூர் ரோட்டில் உள்ள இன்னொரு ஸ்டேட் பாங்க் ஏடிஎம் மையத்திற்கு சென்றார். அங்கும் பணம் இல்லை. இன்று காலை 6 மணி வரை அந்த ஏடிஎம் எந்திரம் வேலை செய்யவும் இல்லை. இன்று காலை 6 மணி அளவில் ஸ்டேட் வங்கி வளாகத்தில் உள்ள ஏடிஎம் சென்று பணம் எடுக்கலாம் என்றால் காலையிலேயே பணம் இல்லை. இதனால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டதுடன் ஸ்டேட் வங்கியின் சேவையை கடுமையாக விமர்சித்தனர்.
ஸ்டேட் வங்கியின் சேவை மிகவும் மோசமாக இருக்கிறது. 1ம் தேதி அனைவரும் பணம் எடுக்க வருவார்கள் என்பது இவர்களுக்கு தெரியாதா, ஸ்டேட் பாங்க் ஊழியர்களுக்கு 10ம் தேதி வாக்கில் சம்பளம் கொடுத்தால் அவர்கள் மனநிலை எப்படி இருக்கும்? என கேள்வி எழுப்பினர். ஏடிஎம்மில் பணம் நிரப்புவது உள்பட , அங்கு செய்யப்படும் ஒவ்வொரு வசதிக்கும் ஸ்டேட் வங்கி நிர்வாகம் செலவு செய்யவில்லை. வாடிக்கயைாளர்கள் பணத்தில் தான் அது இயங்குகிறது. அப்படி இருக்கும்போது ஏன் வாடிக்கையாளர்களுக்கு தரமான , தடையற்ற சேவை செய்ய அந்த வங்கி முன்வரவில்லை என வாடிக்கையாளர்கள் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தனர்.