லோக்சபாவுக்கு கடைசி கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் 9 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. திரிணமுல் காங்கிரசின் அபிஷேக் பானர்ஜி, பா.ஜ.,வின் ரேகா பாத்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுஜன் சக்கரவர்த்தி ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவார்கள்.
மாநிலத்தில் சில பகுதிகளில் வன்முறை வெடித்தது. ஜாதவ்பூர் தொகுதிக்கு உட்பட்ட சதுலியா பகுதியில் மோதல் வெடித்தது. மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் ஐஎஸ்எப் கட்சியினர் மோதிக் கொண்டனர். அப்போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அதில், ஐஎஸ்எப் தொண்டர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
தெற்கு 24 பார்கனஸ் மாவட்டத்தின் குல்தலி ஓட்டுச்சாவடிக்குள் செல்ல சில தேர்தல் முகவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த கும்பல் ஒன்று, அத்துமீறி உள்ளே நுழைந்து, மின்னணு ஓட்டு இயந்திரத்தை தூக்கிச் சென்று குளத்தில் வீசினர். இதனால், கோபமடைந்த உள்ளூர் வாசிகள் விவிபேட் இயந்திரத்தை சேதப்படுத்தினர். நேற்று பஷீர்ஹட் தொகுதிக்கு உட்பட்ட சந்தேஷ்காலியில் பதற்றம் ஏற்பட்டது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் போலீசார் மிரட்டுவதாக உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.