ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதியில் அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கத்தை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இங்கு தாமாகா போட்டியிட்ட நிலையில் இப்போது அங்கு அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளது.
கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுகவின் கோட்டை என்று சொல்லிக்கொள்ளும் அதிமுக அதை நிரூபிக்க இந்த தேர்தலை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி ஒரு கொங்கு சமுதாயத்தை சேர்ந்தவர். மேலும் கொங்கு சமுதாயத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தி நாம் வெற்றி பெற்று விட்டால் மத்திய பா.ஜ. நம்மை டார்ச்சர் செய்யாது. அடுத்த வருடம் வரும் மக்களவை தேர்தலில் நாம் கொடுத்த இடத்தை வாங்கி கொள்வார்கள்.
மத்தியில் பா.ஜ. ஆட்சியில் இருப்பதால் நாம் துணிந்து விதிகளை மீறி தேர்தல் பணியாற்றலாம். மத்திய பார்வையாளர்கள் தான் வருவார்கள் நம்மை எதுவும் செய்யமாட்டார்கள். அதே நேரத்தில் தினமும் நமக்கு தொல்லை கொடுக்கும் ஓபிஎஸ் அரசியல் வாழ்வுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என கருதி எடப்பாடி இந்த முடிவை எடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் கூறுகின்றன.
எனவே இந்த தேர்தல் குறித்து இன்று எடப்பாடி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் திண்டுக்கல் சீனிவாசன், முனுசாமி, தங்கமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறார்கள். அதிமுக வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் ஆலோசனை நடப்பதாக கூறப்படுகிறது. இரட்டை இலை கிடைக்காவிட்டால் வேறு என்ன சின்னத்தில் போட்டியிடலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்கிறார்கள்.
இதற்கிடையே நம்ம இலக்கு, ஈரோடு கிழக்கு என்று அதிமுகவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.