தலைநகர் டி ல்லியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் அங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குடிநீர் பஞ்சத்தை தீர்க்க உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது டில்லி ஆம் ஆத்மி அரசு.
டில்லி ஆம் ஆத்மி அரசு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அண்டை மாநிலங்களான அரியானா, உத்தரப் பிரதேசம், இமாச்சலில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் பாகுபாடுகளை புறந்தள்ளிவிட்டு பாஜகவினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என முதல்வர் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசின் போர்க்கால நடவடிக்கையை தாண்டியும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். “எங்கள் பகுதிக்கு ஒரே ஒரு டேங்கர் லாரி தான் தண்ணீருடன் வருகிறது. அது எங்களுக்கு போதவில்லை. நாங்கள் ரூ.20 கொடுத்து தண்ணீர் குடிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். பல முறை அரசுக்கு மனு எழுதியும் பலன் இல்லை. ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. ஏழைகளின் குரல் யாருக்கும் கேட்பதில்லை” என கிழக்கு டில்லியின் கீதா காலனி பகுதியில் வசித்து வரும் ருதால் சொல்கிறார்.
அரசின் தண்ணீர் டேங்கர் எங்கள் பகுதிக்கு வர 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. தனியார் டேங்கருக்கு ரூ.1800 முதல் ரூ.2000 வரை செலுத்த வேண்டி உள்ளது என தெற்கு டில்லியின் ராஜு பார்க் பகுதியில் வசிக்கும் புஷ்பா தெரிவித்தார்.