உலகிலேயே கலப்படம் இல்லாத ஒரு பொருள் தாய்ப்பால். ஒவ்வொரு தாயும் தனது ரத்தத்தை பாலாக்கி தன் குழந்தைகளுக்கு கொடுக்கிறாள். அதனால் தான் தாய்ப்பால் குழந்தைகளுக்கு உணவாகவும், நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது. தாய்ப்பால் தானம் வழங்கலாம். அதற்கு விருப்பம் உள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் பதிவு செய்து வழங்கலாம்.
ஆனால் எதையும் வியாபார நோக்கத்தில் பார்க்கும் நம் மக்கள் தாய்ப்பாலையும் விற்பனைக்கு கொண்டு வந்து விட்டனர்.
சென்னை மாதவரத்தில் உள்ள ஒரு கடையில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரி கஸ்தூரி தலைமையில் அந்த கடைக்கு சென்று சென்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது 50க்கும் மேற்பட்ட புட்டிகளில் பால் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பால் யாரிடம் இருந்து பெறப்பட்டது. பால் வியாபாரம் எத்தனை நாட்களாக நடக்கிறது என விசாரணை நடத்தி அந்த கடைக்கு சீல் வைத்தனர். தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பால் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.