கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள தடாகம் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் கருஞ்சிறுத்தை உலா வந்ததாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தடாகம் சோமையனூர் திருவள்ளுவர் நகர், பழனியப்பா லேஅவுட் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவரின் வீட்டின் கோழி நேற்று அதிகாலை இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் மேய்ந்து மேய்ந்து கொண்டு இருந்தது. அதன்பின்னர் கோழியை குடும்பத்தினர் தேடியுள்ளனர் கிடைக்கவில்லை கோழியின் இறக்கைகள் வீட்டின் முன் கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி மூலம் ஆய்வு செய்தபோது மேய்ந்து கொண்டிருந்த கோழியை சிறுத்தை கவ்விக் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து அப்பகுதி மக்களிடம் மிகுந்த கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கூறி உள்ளனர். மேலும் இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு வனத் துறையினர் பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.