சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர், நுண்பார்வையாளர்கள் ஈடுபடவுள்ளனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுபாபட்டுக் கருவி, வி.வி.பேட் ஆகியவை தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேசைகள் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுகளாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் நடைமுறைகள் முழுவதுமாக கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்படவுள்ளன. வாக்கு எண்ணும் பணிகளில் கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் சுழற்சி முறையில் அவரவர்களுக்கான சட்டமன்ற தொகுதி மற்றும் மேசை ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. முதலாவதாக தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அஞ்சல் வாக்குச்சீட்டுகளை எண்ணுவதற்கு தனியாக ஒன்பது (9) மேசைகள் அமைக்கப்படும்.
இப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முறைகள், கட்டுபாட்டு கருவிகள் ஒதுக்கீடு செய்யப்படுதல், வாக்கு எண்ணிக்கை பணியாளர்களின் பணிகள், வாக்கு எண்ணிக்கையின் போது எதிர்நோக்கப்படும் சிறப்பு இனங்கள் அவற்றின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரத்தில் (VVPAT) சேகரமாகியுள்ள காகித சீட்டுகளை எண்ணும் நடைமுறைகள், தபால் வாக்கு எண்ணும் அறையில் வாக்குகள் எண்ணப்படும் முறைகள், மின்னணு வாக்குப்பதிவு முறையின் மூலம் பெறப்பட்ட ஓட்டுகளை எண்ணுதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .ம.ச.கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுமதி, மாவட்ட தகவலியல் மைய அலுவலர் ஜான் பிரிட்டோ, வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.