நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் உலா வந்த காட்டு யானைகள் கூட்டத்தில் குட்டி யானை ஒன்று 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்ததால் தாய் யானை உட்பட அனைத்து யானைகளும் குட்டியை மீட்க பிளிறி கொண்டிருந்தன. அதன் சத்தத்தைக் கேட்டு அந்த மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் யானைக் கூட்டங்கள் கிணற்றைச் சுற்றி நின்றிருப்பதை கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைக் கூட்டங்களை துரத்தி விட்டு கிணற்றுக்குள் இருந்த குட்டி யானையை வெளியே கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர் . இரண்டு ஜேசிபிகள் உதவியுடன் யானை விழுந்திருந்த கிணற்றில் அதனுடைய ஆழத்திற்கு மறுபகுதியில் இருந்து பாதையை அமைத்து கிணற்றுக்குள் இருந்த குட்டி யானை மீட்க முயற்சித்தனர். சேற்றுச்சகதிக்குள் மாட்டி இருந்ததால் வெளியே கொண்டு வர முடியவில்லை. மீண்டும் ஜேசிபி உதவியுடன் பாதை அகலமாக்கப்பட்டு குட்டியானையின் ஒரு காலில் கயிற்றைக் கட்டி மெதுவாக மேலே இழுத்து குட்டியானையை மீட்டனர். கிணற்றிலிருந்து வெளியே வந்த யானை தேயிலை தோட்டங்களுக்குள் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தது. மேலும் வனத்துறையினரை கண்டு ஆக்ரோஷமாக ஓடி வந்தது இதனால் அச்சமடைந்த வனத்துறையினர் மரத்தின் மீது ஏறி தப்பித்தனர் . பின்னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி குட்டியானையை அதன் தாயுடன் சேர்த்தனர். குட்டி யானையின் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வந்த வனத்துறையினர் தாய் யானையுடன் குட்டியானை சேர்ந்ததை உறுதி செய்தனர் .
அதிகாலை 3 மணியிலிருந்து 11 மணி நேரத்துக்கு மேலாக கிணற்றில் தத்தளித்த குட்டி யானை மீட்கப்பட்டது. குறிப்பாக 8 மணி நேரத்திற்கும் மேலாக அந்த குட்டி யானையை மேலே கொண்டு வர வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு, காயங்கள் இல்லாமல் அதை பாதுகாப்புடன் அதன் தாயுடன் சேர்த்து வைத்ததை அந்த பகுதி மக்கள் வனத்துறையினறை வெகுவாக பாராட்டினர்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/05/யானை-1-424x620.jpg)