புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அண்ணா பண்ணையில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் உயிரி பூச்சிக்கொல்லி பண்புடைய தாவரங்களான ஆடாதொடா, நொச்சி போன்ற தாவர நடவுப் பொருட்களை வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஆடாதொடா நொச்சி தாவரக் கன்றுகளை பாலித்தீன் பைகளின் மூலம் நாற்றங்கால் உற்பத்தி செய்திடும் பணி புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் மா.பெரியசாமி முன்னிலையில் நடைபெற்றது.
இத்திட்டத்தில் ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 50 நடவுக்கன்றுகள் மட்டும் வழங்கப்படும் .சிறு குறு மற்றும் மகளிர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மானிய விலையில் வழங்கப்படும் ஆடாதொடா, நொச்சி போன்ற தாவரக் கன்றுகளை தரிசு நிலங்களிலும் வயல்வெளி வரப்புகளிலும் நடவு செய்து பரவலாக்கம் செய்து இதனை சிறந்த பூச்சி விரட்டியாக வயல்களிலும் தானிய சேமிப்பு கிடங்குகளிலும் பயன்படுத்தலாம்.
இத் தாவரங்கள் பூச்சி நோயை கட்டுப்படுத்துவதோடு வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்பட்டு மகசூல் கூடுதலாக பெறவும் வழிவகை செய்கிறது. அன்னவாசல் வட்டாரத்தில் நடப்பாண்டில் 13,500 கன்றுகள் விநியோகம் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது . மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)
வி .எம். ரவிச்சந்திரன், வேளாண்மை துணை இயக்குனர் (மாநிலத் திட்டம்) மு சங்கர லட்சுமி, உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ஜெயபாலன், நுண்ணீர் பாசன துணை இயக்குனர் மா.ஆதி சாமி, மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குனர் பி.செல்வி மற்றும் அன்னவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எஸ் .ராஜசேகரன் கலந்து கொண்டனர்.