Skip to content

3 நாட்கள் தியானம் .. பிரதமர் மோடி நிகழ்ச்சிகள் முழுவிபரம்..

லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை (30ம் தேதி) மாலை 4:35 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து நேரடியாக விவேகானந்தர் பாறைக்கு செல்லும் அவர் அங்கு தியானத்தை தொடங்குகிறார்.அன்று இரவும், மே 31 இரவும் அங்கு தங்கும் அவர் ஜூன் 1 மாலை அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். பின், ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டில்லி செல்கிறார்.
பிரதமர் தங்குவதற்காக விவேகானந்தர் பாறையில் உள்ள கேந்திர நிர்வாக அதிகாரியின் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது. விவேகானந்தர் பாறையில் விவேகானந்தர் அமர்ந்து தியானம் செய்த இடத்தில் மூன்று நாட்கள் பிரதமர் தியானம் மேற்கொள்கிறார்.
இதனால், அவருக்கு தேவையான உணவுகள் அனைத்தும் விவேகானந்தர் பாறையில் அமைக்கப்படும் சிறப்பு அறையில் தயாரிக்கப்படுகிறது. பத்திரிகையாளர் உட்பட எவருக்கும் அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் இங்கு செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், நாளை கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி பகவதி அம்மனை தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் பார்வையிட உள்ளதாக தெரியவந்துள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரி முழுவதும் தீவிர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிய பகுதிகள் அனைத்தும் கடற்படை, கடலோர காவல்படை வீரர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *