திருச்சி-புதுக்கோட்டை மெயின்ரோட்டில் கொட்டப்பட்டு பகுதியில் உள்ளது ஆவின் பால்பண்ணை. திருச்சி மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் பால் இங்கு பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு சம்மந்தப்பட்ட ஏஜெண்ட்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதிகாலை 3 மணிக்கு துவங்கி அதிகாலை 7 மணி வரை பால் பாக்கெட்டுகள் லாரிகளில் திருச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சப்ளை செய்யப்படும். தனியார் இயக்கும் ஆவின் பாக்கெட் லாரிகள் அனைத்திற்கும் ஆவின் நிர்வாகம் மாதம் வாடகை தரும். கடந்த 6 மாதமாக ஆவின் லாரிகளுக்கு வாடகை பாக்கி என கூறப்படுகிறது. இது குறித்து லாரிகளின் உரிமையாளர்கள் திருச்சி ஆவின் நிர்வாகத்திடம் கேட்டும் பதில் இல்லை என்பதால் இன்று அதிகாலை 3 மணி துவங்கி பாக்கெட்டுகளை எடுத்து செல்லும் லாரிகள் இயங்கவில்லை. காலை 7 மணி வரை ஆவின் அதிகாரிகள் யாரும் இது குறித்து லாரிகளின் உரிமையாளர்களிடம் பேசவில்லை. அதிகாரிகள் வந்து கொண்டிருப்பதாகவும் ஸ்டிரைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக நிலை ஏற்படும் எனவும் சில மணி நேரங்களில் ஆவின் பாக்கெட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் அதிகாலை 1 மணி அளவில் ரெடி செய்யப்பட்ட லட்சகணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள் சப்ளை செய்யப்படாமல் உள்ளதால் அவை அனைத்தும் கெட்டுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், திருச்சி ஆவின் பால்பண்ணையில் இருந்து சப்ளை செய்யப்படும் பகுதிகளில் ஆவின் பால் பாக்கெட்டுகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.