புதுக்கோட்டை கணேஷ் நகர் 1ம் வீதி, கொட்டகைகாரத் தெருவில் வசிப்பவர் மதபோதகர் ஜான் தேவசகாயம்(54). இவரது மனைவி எஸ்தர் ஹெலன். இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக குடும்பத்துடன் கோவை சென்றிருந்தனர். வீட்டில் ஆள் இல்லை என்பதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 80 பவுன் நகைகளை அள்ளிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.45 லட்சம் இருக்கும் .
இன்று காலையில் வீடு திரும்பிய ஜான் தேவ சகாயம், வீட்டின் கதவு கொண்டி உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது துணிகள் சிதறி கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 80 பவுன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மதபோதகர் கணேஷ் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தவாறு சென்றது. கைரேகை நிபுணர்களும் அங்கு தடயங்களை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.