சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத்தான் தேர்வு செய்ய இருந்தது. அதன்படி ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஏற்கனவே ஐதராபாத் அணி லீக் ஆட்டத்தில் பேட்டிங்கில் பல சாதனைகள் புரிந்திருந்தது.
எனவே இறுதிப்போட்டியிலும் அது பேட்டிங்கில் எப்படியும் 250க்கு மேல் குவிக்கும் என ரசிகர்கள் மட்டுமல்ல, எதிர் அணியான கொல்கத்தாவே அதிர்ச்சியடைந்தது. ஆனால் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத், கொல்கத்தா அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 18.3 ஓவர்களில் 113 ரன்களில் சுருண்டது. ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் ஆடிய ஒரு அணி மிககுறைந்த ரன்கள் எடுத்தது இதுதான் . அந்த அளவுக்கு நேற்று ஐதராபாத் மோசமான பேட்டிங்கை தந்தது. 20 ஓவர் கூட முழுவதும் ஆட முடியவில்லை. கடைசி 3 பந்து இருக்கும்போதே நடையை கட்டிவிட்டது.
இதனையடுத்து குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா 10.3 ஓவர்களிலேயே இலக்கை கடந்து வெற்றி பெற்றது. கடைசியாக 2014ம் ஆண்டு கோப்பையை வென்றிருந்த கொல்கத்தா 10 ஆண்டுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது. அந்த அணிக்கு ரூ.20 கோடி ரொக்கப்பரிசுடன் கோப்பையும் வழங்கப்பட்டது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதையும் சேர்த்து கடைசி 7 சீசன்களில் முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியே கோப்பையை வென்றுள்ளது. இந்த ஐ.பி.எல்லிலும் அதுதான் நடந்துள்ளது.