திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்த மணிகண்டம் என்ற இடத்தில் நேற்று காலை திருச்சி தாசில்தார் (வரவேற்பு) என்ற பெயர் பலகை கொண்ட அரசு ஜீப் (டிஎன் 45 ஜி 1726) வந்து கொண்டிருந்தது. அந்த ஜீப்பை அரசு டிரைவர் புஷ்பராஜ் (37) ஓட்டி வந்தார். மணிகண்டம் ஒன்றிய அலுவலக கட்டடம் அருகே வந்தபோது, திடீரென ராங் ரூட்டில் ஜீப்பை திருப்பிய புஷ்பராஜ் ஜீப்பை வேகமாக ஒட்டினார் . எதிர் திசையில் வந்த பைக் மற்றும் மொபட் மீது ஜீப் மோதியதில், பி தனபால் (44) பெயிண்டர் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மொபட்டில் சென்ற எம் மணி (58) கோவில் பூசாரி தாசில்தாரின் ஜீப்பில் மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த மணி திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிசிக்சைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தில் ஜீப் டிரைவர் புஷ்பராஜ் லேசான காயம் அடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்சில் திருச்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் இருந்த புஷ்பராஜ் திடீரென ஆம்புலன்சை நிறுத்தி இறங்கி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.