கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒரு நாளில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அந்த நாளில் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து வந்தனர். இந்த நடைமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டு இந்த நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக இந்த நடைமுறை நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் எச்சில் இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் புனிதமான சடங்குக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரி கரூர் நவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், இந்த எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வை நடத்திக் கொள்ளலாம் என கடந்த மே 17ஆம் தேதி தீர்ப்பு அளித்தார். இதையடுத்து, மே 18 ஆம் தேதியன்று, நெரூரில் பக்தர்கள் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட்ட இலைகளில் அங்கபிரதட்சணம் செய்தனர். எச்சில் இலையில் உருண்டு நேர்த்திக்கடன் செய்வதை உயர் நீதிமன்றமே அங்கீகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்களை இழிவு செய்யும் இந்த சடங்குக்கு நீதிமன்றம் துணை போவதா என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதியிடம் கொளத்தூர் மணி, கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.
நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் புகார்
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/05/ஜிஆர்-சுவாமிநாதன்-930x620.jpg)