ஈரோடு கிழக்கு தொகுதி திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், கணிதமேதை ராமானுஜம் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய பகுதி.. ஈரோடு கிழக்கு தொகுதி ஈரோடு நகரத்திற்குள்ளேயே முடிந்துவிடக் கூடிய தொகுதி என்பதால் விவசாயம் இல்லை. அதேநேரம் ஜவுளித்தொழிலின் மையமாகத் திகழ்கிறது. துணிகளுக்கு சாயமிடுதல், பிளீச்சிங் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் மற்றும் சலவை ஆலைகள் செயல்படுகின்றன. இங்கு கனி மார்க்கெட்டில் (ஜவுளிசந்தை) திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடக்கும் சந்தையில் மட்டும் சுமார் ரூ.2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஜவுளி வாங்க வியாபாரிகள் வந்து குவிவார்கள். இங்கு நடைபெறும் ஜவுளி சந்தை மிகவும் புகழ்பெற்றதாகும். சாதாரண நாட்களில் ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகமும், பண்டிகை காலங்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகமும் நடைபெறும். 2008-ம் ஆண்டு முந்தைய தேர்தல் வரை ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதியாக இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது ஈரோடு தொகுதி 2 ஆக பிரிக்கப்பட்டு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு தொகுதிகளாக உருவானது.
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் ஈரோடு தொகுதியாக இருந்தபோது தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பொது உடமை கட்சி 1 முறையும் வெற்றி பெற்று உள்ளது. தொகுதி சீரமைப்புக்கு பின்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்று உள்ளது. 2011-ல் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.வின் வி.சி.சந்திரகுமாரும், 2016-ல் அ.தி.மு.க.வின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசும் வெற்றி பெற்றனர். 2011 தேர்தலில் தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி, தே.மு.தி.க. வேட்பாளரான வி.சி.சந்திரகுமாரிடம் தோல்வி அடைந்தார். 2016 தேர்தலில் அப்போதைய எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார் தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்து களம் கண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க.வின் கே.எஸ்.தென்னரசு 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா. 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் 10 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றனர்.
இந்த தேர்தலில் நோட்டாவுக்கு 1546 வாக்குகளும் அ.ம.மு.க. வேட்பாளர் முத்துகுமரனுக்கு 1204 வாக்குகளும் கிடைத்தது. திருமகன் ஈ.வெ.ரா. மறைவால் தற்போது இந்த தொகுதிக்கு முதல் முறையாக இடைத்தேர்தல் நடக்கிறது. இது தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு நடைபெறும் 4-வது தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் கடந்த முறை 8 ஆயிரத்து 904 ஓட்டு வித்தியாசத்தில் திருமகன் ஈ.வெ.ரா. வெற்றி பெற்றார். இந்த நிலையில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுவதால் இந்த தொகுதியை பிடிக்க தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தி.மு.க. ஆட்சி அமைந்து நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இங்கு போட்டியிடுகிறது. இளங்கோவனின் இளைய மகன் சம்பத் சஞ்சய் இங்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியில் யார் நின்றாலும் அவர்கள் வெற்றிக்காக பாடுபடுவோம் என்று அமைச்சர் முத்துசாமி கூறி உள்ளார். அதே போல் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த அ.தி.மு.க. கூட்டணியும் எப்படியும் வெற்றி பெற்று ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. கோட்டை என்று நிரூபிக்க சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றுவது யார்? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.