மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (33) பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபினயா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடத்துக்குள்ளே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது சம்பந்தமான விசாரணை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வந்தது. திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா (50) விசாரித்து வந்துள்ளார்.
விசாரணையில் அபினயா தனது பெற்றோர் திருமணத்திற்கு போட்ட 95 பவுன் நகையை கணவர் ராஜேஷிடம் திருப்பி வாங்கிதரும் படி கேட்டுள்ளார். இதனையடுத்து ராஜேஷ் 95 பவுன் நகையை இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கொடுத்து தனது மனைவியிடம் கொடுக்கும் படி கூறி உள்ளார். நகையை பெற்றுகொண்ட இன்ஸ்பெக்டர் கீதா அபினயாவிடம் கொடுக்காமல் இருந்துள்ளார்.
தொடர்ந்து அபினயா தரப்பினர் ராஜேஷிடம் நகையை கேட்கவே தான் அதனை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து ராஜேஷ் இன்ஸ்பெக்டர் கீதாவிடம் நகையை கேட்க அவர் மழுப்பி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் புகார் செய்தார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கீதா 10 பவுன் நகையை திருப்பி கொடுத்துள்ளார். மீதி நகையை கொடுக்கவில்லை.
பின்னர் ராஜேஷ் உயர் போலீஸ் அதிகாரி திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குறித்து புகார் செய்தார். இதுகுறித்து டி.ஐ.ஜி. ரம்யாபாரதி திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாவை விசாரணை செய்தார் விசாரணையில் இன்ஸ்பெக்டர் நகையை வங்கியில் ரூ.42 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து டி.ஐ.ஜி. ரம்யாபாரதி இன்ஸ்பெக்டர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.