புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 221 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். அதில், காவலர் ஒருவர் உட்பட 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களில் காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி சோதனையும் நடைபெற்றது. இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படாததால், இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், ஏற்கெனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட, வேங்கைவயலைச் சேர்ந்த, மணமேல்குடி போலீஸ் ஸ்டேஷனில் காவலராகப் பணிபுரியும் முரளியிடம் நேற்று முன்தினம் புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
இதையறிந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் சிபிசிஐடி அலுவலகம் அருகே திரண்டனர். பின்னர் விசாரணை முடிந்து வெளியே வந்த காவலர் முரளி மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோருடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுக்கோட்டை நிர்வாகிகள் திருமாவளவனை நேற்று சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இது தொடர்பாக விடுதலைசிறுத்தைகள் கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் வெள்ளை நெஞ்சன் கூறும்போது, “காவலர் மீதானவிசாரணையின்போது வழக்கறிஞர் என்ற அடிப்படையில் நானும் சிபிசிஐடி அலுவலகம் சென்றிருந்தேன். தவறு செய்தவர்கள் பட்டியலில் காவலரையும் சேர்க்கும் திட்டத்தில் போலீஸார் இருப்பது விசாரணையின் போக்கில் தெரிகிறது. இதுகுறித்து கட்சித் தலைவர் திருமாவளவனிடம் விளக்கினோம். அவரது அறிவுரைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்” என்றார்.