ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சி விருப்பத்தை தமாக ஏற்றுக்கொண்டுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: , ” தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டு இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக விரும்பியது. மக்கள் நலன், கூட்டணி கட்சிகளின் நலனை நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது”
இவ்வாறு அதில் கூறி உள்ளார். அதிமுக நிர்வாகிகள் நேற்று ஜிகே வாசனை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்திய நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2021 ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. இந்த தொகுதியில் யுவாராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போதைய அரசியல் சூழலை பொறுத்து அதிமுக போட்டியிடுவதாக தெரிகிறது. ஏற்கனவே திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமாகா போட்டியிட்ட தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்த ஜி.கே. வாசனுக்கு ஈரோடு மாவட்ட தமாகா நிர்வாகிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். தனது எம்.பி பதவிக்காக கட்சியை அடகு வைக்க வாசன் தயாராகிவிட்டார். அவருக்கு எப்போதும் ஒரு எம்.பி. பதவி தேவை. இதற்காக அவர் தொகுதியை விட்டு கொடுத்து விட்டார். இனி அவரை நம்பி இந்த கட்சியில் எந்த தொண்டனும் இருக்கமாட்டான் என ஈரோடு மாவட்ட தொண்டர்கள் தங்கள் கொந்தளிப்பை வெளியிட்டு உள்ளனர்.