ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்.27ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இது காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. எனவே இங்கு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி இருந்தார்.
இந்நிலையில் அழகிரி இன்று இரவு 8 மணியளவில் சென்னையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அவருடன் திருநாவுக்கரசர் எம்பி, முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோரும் வந்திருந்தனர். இவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ஈரோடு இடைத்தேர்தல் பற்றி பேசினர். இந்த சந்திப்புக்கு பின், ஈரோடு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படுவதாக திமுக அறிவித்தது.