கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செம்மனாம்பதி கிராமத்தை சேர்ந்த விஜய் – திவ்யா தம்பதியினர், விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களது ஒரே மகன் நான்கு வயதே ஆன உதயதீரன். கடந்த சில மாதங்களாக தங்களுடைய மகனின் உடலில் சில மாற்றங்கள் தெரிந்ததாகவும் மற்ற குழந்தைகளை போல இவர்களது குழந்தை இயல்பாக விளையாட முடியாத சூழல் இருந்ததும் நாளடைவில் காலில் தொடர் வலி ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.
பின்னர் மருத்துவர்களை நாடிய பெற்றோர் மகனுக்கு தசை நார் சிதைவு நோய் இருப்பதும் அவர்களுக்கு தெரியவந்தது. இதை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இந்தியாவில் இந்த நோய்க்கு உயிர் காக்கும் மருந்து இல்லை., ஐந்து வயதுக்கு மேல் இந்த நோயின் பாதிப்பு அதிகளவில் காணப்படும் அதிகபட்சம் 20வயது வரையே பாதிக்கப்பட்ட இந்த சிறுவன் உயிரோடு இருப்பான் என்ற தகவலை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனை காப்பாற்ற அங்கும் இங்குமாக அலைந்து ஒரு வழியாக இந்த நோய்க்கான மருந்து அமெரிக்காவில் உள்ளது என்ற செய்தி இவகளை ஆறுதல் அடைய செய்தது. ஆனால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா நிறுவனம் தர முன்வரவில்லை. ஏதோ ஒரு வழியாக துபாயில் இந்த நோய்க்கு அந்த அமெரிக்கா மருந்து பயன்படுத்தி ஒருவரின் உயிரை காப்பாற்றியது தெரிந்த பெற்றோர் துபாயில் உள்ள அந்த மருத்துவமனைக்கு சென்று தன் மகனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர்.
இதில் நோயால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு மருந்தை செலுத்த அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்தது. மருந்தின் விலை 24 கோடியே 20லட்சம் ரூபாய் எனவும் இந்த மருந்தை தன் மகனுக்கு ஐந்து வயது நெருங்குவதற்குள் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் மகனின் உயிரை காப்பாற்ற மருத்துவ அறிக்கையோடு மருத்துவமனைகள், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நாடி அலைகிறார்கள் இந்த இளம் தம்பதி. தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.