மராட்டியத்தில், பா.ஜ.க. தலைவர் மற்றும் துணை முதல்-மந்திரியாக பதவி வகிப்பவர் தேவேந்திர பட்னாவிஸ். இவர் முன்னாள் முதல்-மந்திரியும் ஆவார். இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ். இவருக்கு ஒய் பிரிவு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டு ள்ளது. இந்நிலையில், மீட் பிரதர்ஸ் சார்பில் இசையமைக்கப்பட்ட, மூட் பனா லியா என்ற பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு அவர், நடிகர் மற்றும் மாடலான ரியாஸ் அலி என்பவருடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். இந்த பாடலுக்கான அவரது நடன அசைவுகளை லட்சக்கணக்கானோர் பாராட்டி உள்ளனர். இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு உள்ளார்.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஹேமா பிம்பிள் கூறும்போது, அம்ருதா பட்னாவிஸ், வீடியோ ஒன்றிற்காக ரியாஸ் அலியுடன் சேர்ந்து நடனம் ஆடி, அதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ அரசு பங்களாவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அம்ருதா முறைப்படி அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வ அனுமதி வாங்கியுள்ளாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனையும், அந்த வீடியோ போன்று வைரல் ஆக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.