Skip to content
Home » ஜெயங்கொண்டம்…விநாயகர் கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள்

ஜெயங்கொண்டம்…விநாயகர் கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுவலூர் கிராமத்தில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சகோதரத்துவத்துடன் வசித்து வருகின்றனர். இந்து கோவில்களும் கிறிஸ்தவ கோவில்களும் நிறைந்து ஆன்மீக பூமியாக இக்கிராமம் விளங்கி வருகிறது. இக்கிராமத்தில் விநாயகர் மாரியம்மன், அய்யனார், ஐயப்பன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களின் கும்பாபிஷேக விழாவை நடத்த ஊர் பொதுமக்கள் திட்டமிட்டு, திருப்பணிகள் முடிவுற்று, கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இவ்விழாவில்கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் கிராம மக்கள் அழைப்பு விடுத்திருந்தனர். கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இந்துக்களின் அழைப்பை ஏற்ற நடுவலூர் புனித சூசையப்பர் ஆலய பாதிரியார்கள் ராபர்ட் மற்றும் ஜோசப் தன்ராஜ் ஆகிய இருவரும் தங்களுக்கே உரித்த பானியில்,  வெள்ளை அங்கி உடையோடு கோவிலுக்கு வந்தனர்.

இவர்களை பார்த்த கிராம மக்கள் ஒரு சேர திரண்டு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தங்களது காலணிகளை கழற்றிவிட்டு, புனித நீர் ஊற்றும் அந்த கோவிலின் விமான கலச உச்சிக்கு சென்று இந்துக்களின் புனித்தை மதித்து, மக்களோடு மக்களாக நின்று இரு கரம் கூப்பி பாதிரியார்கள் வணங்கினர். பின்னர் ஆகம விதிப்படி கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் சார்பில் கோவிலுக்கு வந்து சிறப்பித்த இரண்டு பாதிரியார்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. அத்தோடு மட்டுமின்றி அங்கிருந்து இளைஞர்கள், பொதுமக்கள், கோவில் கோபுரத்தோடு, பாதிரியார்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வை மதத்தை   வென்ற  மனிதநேயம் என்று ஊர்மக்கள்  மகிழ்ச்சி  தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!