கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் அருகே அதிகாலை 4.30 மணிக்கு நின்றிருந்த வாலிபர் மீது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த வாலிபரை அக்கம்,பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மேட்டுப்பாளையம் போலீசார் அந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை கைப்பற்றிவிசாரணை நடத்தினர். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஊட்டிக்கு வந்த சுற்றுலா பஸ் மேட்டுப்பாளையம் பஸ் நிலைய பகுதியில் நின்றிருந்த வாலிபர் மீது மோதியதும், அதில் படுகாயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்காமல் பஸ்சில் இருந்து இறங்கிய டிரைவர் சிவராஜ் மற்றும் கிளீனர் சரவணன் ஆகியோர், அந்த வாலிபரை தூக்கி ரோட்டின் ஒரத்தில் போட்டுவிட்டு மீண்டும் பஸ்சை எடுத்து செல்வதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பஸ் டிரைவர் சிவராஜ் மற்றும் கிளீனர் சரவணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடக பஸ் டிரைவரின் இந்த சம்பவம் பலரையும் கோபமடைய செய்துள்ளது.