மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த 48 மணி நேரத்துக்குள் பதிவான வாக்கு சதவீதத்தின் தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என உத்தரவிடக்கோரிய மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) அவசர வழக்காக விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
வாக்கு சதவீதங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் உள்ளிட்டவை வாக்காளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய ஏடிஆர் அமைப்பு, மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த 48 மணி நேரத்துக்குள் பதிவான வாக்கு சதவீதத்தின் தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
அந்த மனுவில், தேர்தல் ஆணையத்தால் வாக்குப்பதிவின் போது ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒரு முறை வெளியிடும் வாக்கு சதவீதத்திற்கும், தேர்தல் நிறைவடைந்த உடன் வெளியிடப்படும் வாக்கு சதவீத தரவுகளுக்கும் இடையே 5% மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.
ஏடிஆர் அமைப்பு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்றே விசாரிப்பதாக தெரிவித்தார்.