தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்தேர்தல் 3 பகுதிகளாக பிரித்து நடத்தப்பட்டது. பின்னர் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் செப்டம்பத், அக்டோபர் மாதங்களில் புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வரும் டிசம்பர் முதல் பகுதி பகுதியாக 2026 வரை நிறைவு பெற உள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்டது போல இல்லாமல் ஒரே கட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி 138 நகராட்சி, 385 ஊராட்சி ஒன்றியம், 488 பேரூராட்சி மற்றும் 12,524 கிராம ஊராட்சிகளுக்கும் அதில் உள்ள 99,333 உறுப்பினர்களுக்குமான தேர்தல் ஒரே கட்டமாக வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.
ஜூன் 2வது வாரம் சட்டமன்ற பேரவை கூடுகிறது. அப்போது இதற்கான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து டிசம்பரில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக இன்று சென்னை அறிவாலயத்தில் தமிழக முதல்வர் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அதில் உள்ளாட்சித் தேர்தல், வரும் ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்தநாள் விழா, மற்றும் வட மாநிலங்களில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் ஆகியவை குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.