Skip to content

  பட்டுக்கோட்டையில் 17 செ.மீ. மழை…… தமிழ்நாட்டிலேயே அதிகம்

தமிழ்நாடு முழுவதும் கோடை மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் நேற்று மாலை முதல் இன்று மதியம் வரை மழை  கனமாகவும், தூறலாகவும் பெய்து வருகி்றது. இன்று காலை வரை அடைமழை காலம் போல மழை தூறிக்கொண்டே இருந்தது. கடந்த  ஒருமாதமாக வாட்டி வதைத்த வெயிலின் கொடூர தாக்குதல் இந்த மழையால் கட்டுக்குள் வந்தது. இதமான காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று இரவும் மக்கள் குளிர்ந்த காற்றை அனுபவித்தவாறே தூங்கினர்.

தஞ்சை நகர் பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்த நிலையில் நேற்று மாலை அரை மணி நேரம் நல்ல மழை பெய்தது. தொடர்ந்து நேற்று இரவு முதல் தஞ்சாவூர் நகர் பகுதி, பூதலூர், வல்லம், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு,  பட்டுக்கோட்டை, மதுக்கூர்,  பேராவூரணி, அம்மாபேட்டை உட்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது.

இந்த மழை காரணமாக தஞ்சை நகர் பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதே போல் கடந்த சில நாட்களாக பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரங்களில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து திடீர் மழையும் ஒரு சில ஊர்களில் மழை பெய்யாமல் போக்கு காட்டியும் சென்ற நிலையில் நேற்று (15ம் தேதி) பேராவூரணியை சுற்றி வானில் கருமேகம் திரண்டு மதியம் 12.30 மணி முதல் மாலை 3 மணி வரை பரவலாக பலத்த மழை பெய்தது. இரவில் பல பகுதிகளில் மழைத் தொடர்ந்து பெய்துக் கொண்டே இருந்தது.

பேராவூரணியில் 45மி.மீ மழை பதிவாகி உள்ளது. இதனால் பொது மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று விடுபெற்று மகிழ்ச்சியடைந்தனர். பலத்த மழையால் பேராவூரணி நகர் பகுதியில் தண்ணீர் தேங்கியது

திருவையாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான கோடை மழை பெய்ததால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். மிதமான கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்யும் பணியிலும், கோடை உழவு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த கோடை மழை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதுபோல நேற்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக கோடை மழை பெய்தபோதிலும் 17 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 17  செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டிலேயே இந்த மழை தான் அதிகமானதாக இன்று பதிவாகி உள்ளது. அடுத்ததாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி14 செ.மீ,  திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி 13 செ.மீ, புதுகை மாவட்டம் மணமேல்குடி 11 செ.மீ,  சேலம் ஆத்தூர் 10செமீ,  மோகனூர் 9செமீ, மயிலாடுதுறை 8 செ.மீ பதிவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!