Skip to content
Home » நெல்லை…….மழை வெள்ளத்தில் பஸ்சை இறக்கிய டிரைவர்…… அதிரடி சஸ்பெண்ட்

நெல்லை…….மழை வெள்ளத்தில் பஸ்சை இறக்கிய டிரைவர்…… அதிரடி சஸ்பெண்ட்

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையில்  வெயில் சுட்டெரித்தது. மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 2.40 மணியளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, நெல்லை சந்திப்பு, டவுன் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

பாளையங்கோட்டை வ.உ.சி. பூங்கா உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போன்று தேங்கியது.வள்ளியூர் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 3.15 மணியளவில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வள்ளியூர் பஸ்நிலையம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் குளம்போன்று தேங்கியது.

வள்ளியூர்- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் சுமார் 4 அடி உயரத்துக்கும் அதிகமாக மழைநீர் தேங்கியது. அப்போது நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசு பஸ், சுரங்கப்பாதையின் நடுவில் சிக்கியது. அந்த பஸ்சில் இருந்த சுமார் 70 பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுகுறித்து வள்ளியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, சுரங்கப்பாதையின் நடுவில் சிக்கிய பஸ்சில் இருந்த பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பஸ்சின் பின்புறம் உள்ள எமர்ஜென்சி கதவை திறந்து, அதன் வழியாக ஒவ்வொரு பயணிகளாக வெளியே தூக்கி பத்திரமாக மீட்டனர். இந்தநிலையில் வள்ளியூர் ரெயில்வே பாலத்தில் தண்ணீர் அதிகமாக இருப்பதாகக்கூறியும் பஸ்சை இயக்கிய டிரைவர் ரவிக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பஸ் சுரங்கப்பாதையில் நுழைவதற்கு முன்பே சிலர் பஸ்சை தடுத்து நிறுத்தி இடுப்பளவிற்கு தண்ணீர் இருக்கிறது. உள்ளே சென்றால் பஸ் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என எச்சரித்துள்ளனர். ஆனால் பஸ்சை இயக்கிய டிரைவர் ரவிக்குமார் எச்சரிக்கையை மீறி பஸ்சை இயக்கி சிக்கிக்கொண்டார். இந்த தகவல் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், தற்பொழுது டிரைவர் ரவிக்குமாரை நாகர்கோவில் கோட்ட மேலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!