Skip to content
Home » பெண் போலீசிடம் பெயர், செல்போன் எண் கேட்டதாக சவுக்கு சங்கர் மீது பரபரப்பு புகார்..

பெண் போலீசிடம் பெயர், செல்போன் எண் கேட்டதாக சவுக்கு சங்கர் மீது பரபரப்பு புகார்..

யூடியூபர் சவுக்கு சங்கர், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உயர் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார எழுந்தது. இது தொடர்பாக கோவை பெண் போலீஸ் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை ‘சைபர் கிரைம்’ போலீசார் அவர் மீது முதல் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் இருந்த சவுக்கு சங்கரை, கோவை ‘சைபர் கிரைம்’ போலீசார் கடந்த 4-ந் தேதி கைது செய்தனர். தொடர்ந்து சென்னை, சேலம், திருச்சி போலீசார் சார்பிலும் அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக திருச்சி மாவட்டம் முசிறி டி.எஸ்.பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவல்துறை அதிகாரிகள் கோவைக்கு சென்றனர். அங்கிருந்து சவுக்கு சங்கரை திருச்சி மகிளா கோர்ட்டில் நீதிபதி ஜெயபிரதா முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். போலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக சவுக்கு சங்கர் பேசியிருந்த நிலையில் அவரை திருச்சிக்கு அழைத்துச்செல்லும் வேனில் காவலுக்காக பெண் போலீசார் மட்டுமே வந்திருந்தனர். இதனையடுத்து நீதிபதி ஜெயபிரதா முன்பு சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கோவையில் இருந்து அழைத்து வரப்பட்ட போது, பாதுகாப்பிற்கு வந்த பெண் போலீசார் தன்னுடைய கையை முறுக்கி தாக்கியதாகவும் அதனை வீடியோவாக பதிவு செய்து காவல்துறையை சேர்ந்த வாட்சப் குழுக்களுக்கு அனுப்பியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஆனால் பெண் போலீசாரின் விரல் கூட சவுக்கு சங்கர் மீது படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சங்கரின் கையை எக்ஸ்ரே எடுத்து கோர்ட்டில் அறிக்கை சமர்பிக்குமாறு நீதிபதி ஜெயபிரதா உத்தரவிட்டார். இதையடுத்து வேனில் தன்னை தாக்கிய பெண் போலீசாரிடம் விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் வழக்கு தொடர்வது தேவையில்லாத ஒன்று. நீதிமன்ற காவலில் இருக்கும் போது கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மீண்டும் காவல்துறை விசாரணைக்கு எடுக்கும்போது கை எலும்பு முறிவு ஏற்பட்டது போல் நாளை கால் முறிவு ஏற்படும் சூழல் உருவாகும் என்று சவுக்கு சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனிடையே பெண் காவலர் ஒருவர், “திருமணமாகாத என்னிடம் வேனில் வரும்போது பெயரையும், செல்போன் எண்ணையும் சவுக்கு சங்கர் கேட்டார். ஒருவேளை என் பெயரை சொல்லி இருந்தால் எனக்கும் அவப்பெயர் ஏற்படுத்தி இருப்பார்” என்று குற்றம் சாட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பெண் காவலரை ஆபாசமாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கரை வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற  நீதிபதி ஜெயபிரதா உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *