மூத்த வேளாண் வல்லுனர் குழு தஞ்சையில் செயல்படுகிறது. இந்த குழுவினர் ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை எப்போது திறக்கப்பட வேண்டும், நடவு பணிகளை விவசாயிகள் எப்போது மேற்கொள்ள வேண்டும் என விரிவான அறிக்கை தயார் செய்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு அந்த குழுவினர் செய்துள்ள பரிந்துரை விவரங்கள் வருமாறு:
நடப்பாண்டில் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் வரும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்க கூடாது.ஒருபோக சாகுபடிக்கு ஆகஸ்ட் 15ம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர்.
தற்போது ஆழ்துளை கிணறு மூலம் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யலாம்.
ஆனால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதால் உப்பு நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குறுவை சாகுபடிக்கு மாற்றாக எள், உளுந்து ஆகிய பயிர்களை விவசாயிகள் மேற்கொள்ளலாம்.
மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகள் ஆகி இதுவரை தூர்வாரப்படாதால் போதுமான அளவு தண்ணீர் சேமிக்க முடியவில்லை எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மேட்டூர் அணையை முறையாக தூர்வாரினால் இன்னும் கூடுதலாக தண்ணீரை சேமிக்க முடியும் எனவே மேட்டூர் அணையை தூர் வாருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இவ்வாறு அந்த குழு பரிந்துரைத்துள்ளது.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை பலமாக பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அது சரியாக இருக்குமாயின், ஜூலை கடைசிக்குள் மேட்டூர் அணை நிரம்பி வழியவும் வாய்ப்புள்ளது.