தென் மேற்கு பருவமழை மூலம் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் மழைப்பொழிவை பெறுகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடக மாநிலங்களும் தென்மேற்கு பருவமழை மூலம் அதிக மழை பெறுகிறது. இந்த மழை அதிகமாக பெய்யும்போது தான் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரும்.
அந்த வகையில் தென்மேற்கு பருவமழை வரும் 19ம் தேதி தெற்கு அந்தமானில் தொடங்குகிறது. பின்னர் அந்த மழை ஜூன் 1ம் தேதி கேரளாவிலும், ஜூன் 13ம் தேதி இந்தியா முழுவதும் மழைப்பொழிவை தரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 106 சதவீதம் பெய்யும் என்றும் இந்தி்ய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பாத நி்லையில், கர்நாடகமும் தண்ணீர் தர மறுத்து விட்டதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டவில்லை. எனவே சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டு 106 சதவீதம் தென்மேற்கு பருவமழை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் கர்நாடகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி மேட்டூர் அணைக்கு அதிக தண்ணீர் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் மேட்டூர் அணையில் இன்றைய நீர்மட்டம் 50.57 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 138கனஅடி தண்ணீர் தான் வருகிறது. குடிநீருக்காக 1500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணை வழக்கமாக குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ல் திறக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாத நிலை காணப்படுகிறது. எனவே தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்து கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகு தான் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறப்பார்கள்.
எனவே இந்த ஆண்டு கர்நாடகத்தில் இருந்து ஜூலையில் தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பார்கள். அதன் பிறகு தான் குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். எனவே இந்த ஆண்டு டெல்டாவில் குறுவை சாகுபடி வழக்கமான 5 லட்சம் ஏக்கரில் செய்ய முடியாது. அதே நேரத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் வாக்கில் மேட்டூர் அணை நிரம்பலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு டெல்டாவில் சம்பா சாகுபடி முழு வீச்சில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.