யூடியூபர் சவுக்கு சங்கரை நான்காம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். போலீஸ் அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் தரக்குறைவாக பேசியதாக ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அவர் சிறையில் தாக்கப்பட்டதாகவும் கையில் காயம் ஏற்பட்டதாகவும் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். கடந்த வாரம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கருக்கு கையில் கட்டு போடப்பட்டது. இந்நிலையில் மறு சிகிச்சைக்காக மீண்டும் கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு இன்று காலை அழைத்து வரப்பட்டார்.
அப்போது சவுக்கு சங்கர் ” சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் தான் என் கைகளை உடைத்தார். கோவை சிறையில் தான் உனக்கு சமாதி” என்று மிரட்கிறார் என கோஷமிட்டபடியே வெளியில் வந்தார். அதனை தொடர்ந்து மீண்டும் அவரை போலீசார் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.