காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த 4-ம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். கைது செய்த பின்னர், சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், தேனியில் அவரது காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் மே 8-ம் தேதியன்று தேனி கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணைக்காக, மதுரையில் உள்ள நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், மீண்டும் கோவை அழைத்து வரப்பட்டு, மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் தேனி மாவட்ட போலீஸார் சோதனை நடத்தினர். மதுரவாயலில் அமைந்துள்ள அவரது வீட்டிலும், தி.நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்துக்கும் சென்ற தேனி மாவட்ட போலீஸார் இந்த சோதனையை மேற்கொண்டனர். சவுக்கு சங்கரின் இல்லம் மற்றும் அலுவலகத்தில், கஞ்சா ஏதாவது பதுக்கப்பட்டுள்ளதா? கஞ்சா வியாபாரிகள் உடன் சவுக்கு சங்கர் தொடர்பு வைத்துள்ளரா? அது தொடர்பான ஆவணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். . தி.நகரில் உள்ள சவுக்கு சங்கரின் அலுவலகத்துக்கு போலீஸார் சோதனையிட வந்தபோது, அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. சாவியைப் பெற்று அலுவலகத்தில் சோதனையிட போலீசார் முயற்சித்தனர். ஆனால், அது முடியாமல் போகவே, அலுவலக கதவின் பூட்டை உடைத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 2 லட்சம் பணம், கஞ்சா அடங்கிய 4 சிகிரெட்டுகள், கார், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து, சவுக்கு சங்கரின் வீடு மற்றும் திநகரில் உள்ள அவரின் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.