அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் தங்கம் விலை 2-வது முறை உயர்த்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரு சவரன் ரூ.55,120 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு தங்கம் விலை உயர்வும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனிடையே
அட்சயதிருதியை நாளான இன்று தமிழகம் முழுவதும் நகைக்கடைகள் பல இடங்களில் அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. அட்சய திருதியையில் ‘குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும்’ என்ற எண்ணம், மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று காலையிலேயே 2 முறை உயர்ந்துள்ளது. எனவே அட்சயதிரிதியையான இன்று நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் காஸாவில் நடக்கும் போர் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. மேலும் சீனாவில் ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாலும் சீன மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கி உள்ளனர்.சீன மக்கள் மட்டுமின்றி சீன மத்திய வங்கியும் தங்கத்தை அதிகளவில் வாங்கி இருப்பு வைக்கிறது.இதுவே உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வதாக கூறப்படுகிறது. ஆனாலும் அட்சயதிருதியை நாளான இன்று நகைக்கடைகளில் மக்கள் வழக்கம் போல திரண்டு உள்ளனர்.