அரியலூர் மேல அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர் கீழப்பழுவூரில் உள்ள செட்டிநாடு சிமெண்ட் ஆலையில், கடந்த மூன்று வருடமாக ஒப்பந்த தொழிலாளியாக பேக்கிங் யூனிட்டில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில், சிமெண்ட் ஆலையில் பேக்கிங் யூனிட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக பேக்கிங் யூனிட்டில் இருந்த பெல்ட்டில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அருகில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், சிமெண்ட் ஆலை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து, முரளி கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்துள்ளனர்.
தகவல் அறிந்து முரளி கிருஷ்ணன் உறவினர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திரண்டிருந்தனர். உறவினர்களை பார்த்த ஆம்புலன்ஸில் வந்த சிமெண்டாலை அதிகாரிகள், மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர், ஆம்புலன்ஸை மருத்துவமனையை வராண்டாவிலேயே விட்டுவிட்டு ஆம்புலன்ஸ் டிரைவர் உள்ளிட்ட அனைவரும் தலைமறைவாகி விட்டனர். இதனால் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனையில் சேர்ப்பதற்கான, கையெழுத்துக் கூட போட யாரும் இல்லாததால் ஆம்புலன்சில் வந்த உடல் ஆம்புலன்ஸ் வண்டியிலேயே சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த, முரளி கிருஷ்ணனின் உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். எனினும் சிமெண்ட் ஆலை நிர்வாகத்தின் சார்பில் யாரும் வராத நிலையில், முரளி கிருஷ்ணனின் உறவினர்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே ஆலை நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு வந்து எவ்வாறு விபத்து ஏற்பட்டது, உயிரிழந்த உடலை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனையில் ஒப்படைக்காமல் சென்றதற்கான காரணம் என்ன என்பது குறித்து, தங்களிடம் கூற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.