அரியலூர் மாவட்டம் வங்குடி கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னாவை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் வங்குடி கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. கிராமத்தின் அதிகப்படியான மக்களின் எதிர்ப்பையும் மீறி கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இதனால் கிராம நிலவியல் அடிப்படையில் அனைத்து குடும்பங்களுக்கும் சீரான குடிநீர் வழங்க முடியாத சூழல் ஏற்படும். பள்ளமான இடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதால், மேடான பகுதியில் குடியிருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே பெரும்பான்மையான மக்கள் வசிக்கக்கூடிய வடக்கு தெரு, கீழ தெரு மற்றும் ரோட்டு தெரு பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய, நடுத்தெருவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியினை, வடக்கு தெருவிற்கு இடமாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கிராமத்தின் மேடான பகுதியான வடக்கு தெருவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதால், பள்ளமான பகுதியில் உள்ள நடுத்தெருவில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் உள்ளிட்ட கிராமத்தின் அனைத்து மக்களுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இது குறித்து கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/05/office7.jpg)