திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் தாலுகாவில் வாழை, வெற்றிலை சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. தற்போதும் பல ஆயிரம் ஏக்கரில் இங்கு வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வாழை தார் தள்ளிய நிலையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு தொட்டியம் தாலுகாவில் பரவலாக சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது.
கோடை மழை சிறிது நேரத்தில் ஓய்ந்துவிடும் என விவசாயிகள் கருதினர். ஆனால் தொடர்ந்து ஒருமணி நேரத்திற்கும் மேலாக சூறாவளி சுழன்றடித்து தாக்கியதுடன் மழையும் இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்தது. வாழை விவசாயிகளை பொறுத்தவரை சித்திரை பிறந்தால் நித்திரை போச்சு என்பார்கள். அது நேற்றும் உண்மையானது.
மழை, சூறாவளி்யின் கோர தாண்டவத்தில் தொட்டியம், காட்டுப்புத்தூர், காடுவெட்டி, சீப்லாபுத்தூர், நத்தம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 5லட்சம் வாழைகளும் அப்படியே சாய்ந்தன. இதுபோல வெற்றிலை கொடிகள் அனைத்து தரையோடு தரையாக சாய்ந்தது. ஏராளமான தென்னை மரங்களும் முறிந்து விழுந்தன.
இது குறித்து தொட்டியம் பகுதி விவசாயிகள் கூறும்போது, கோடை மழை பயிர்களுக்கு நல்லது பெய்யட்டும் என்று மகிழ்ச்சியோடு காத்திருந்தோம். ஆனால் சூறாவளியுடன் கொட்டிய மழையால் விவசாயிகளுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டு ள்ளது. அனைத்து பயிர்களும் சேதம் அடைந்து விட்டது. வேளாண் அதிகாரிகள் உடனடியாக இங்கு வந்து நிலமையை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். வெற்றிலை, வாழை, தென்னை சேதம் குறித்து தகவல் அறிந்த முசிறி திமுக எம்.எல்.ஏவும், மாவட்ட திமுக செயலாளருமான காடுவெட்டி தியாகராஜன் இன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார்.