யூடியூப்பர் சங்கர் தனக்கு சொந்தமான சவுக்கு மீடியா என்கிற யூடியூப் சேனலில் பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை பேசிவருவதாக புகார்கள் எழுந்தன. சமீபத்தில் இவர் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், பெண் ஏட்டுக்கள், மற்றும் பெண் எஸ்ஐக்கள் குறித்து ஆபாசமாக பேட்டி அளித்தார். அந்தப் பதிவை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டது பல்வேறு தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் தரப்பட்டது. அதன்பேரில் போலீசார் வீடியோவை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் சங்கரை விசாரணைக்காக தேடியபோது, அவர் தேனி மாவட்டம், பூதிப்புரம் செல்லும் வழியில் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினரும், ரயில்வே கான்ட்ராக்கடருமான ஒருவரது தங்கும் விடுதியில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை தேனி சென்ற கோவை போலீசார் சங்கரை கைது செய்தனர். பின்னர் கோவைக்கு வேனில் அழைத்து சென்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வழியாக வேன் வந்து கொண்டிருந்தபோது கோவை செல்லும் சாலையில், தெக்கலூர் என்ற இடம் அருகே வந்தபோது எதிரே கார் மெக்கானிக் லோகநாதன் என்பவர் ஓட்டி வந்த கார், போலீஸ் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் லோகநாதன் படுகாயம் அடைந்தார். இவ்விபத்தில் சங்கர் மற்றும் போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சங்கரை தாராபுரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தி மாற்று வாகனத்தில் கோவை அழைத்து வந்தனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து உடல் பரிசோதனை செய்யப்பட்டு, கோவை ஜேஎம் 1 நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தினர். வழக்கை நீதிபதி கோபால கிருஷ்ணன் வரும் 17ம் தேதிவரை சங்கரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கோவை சிறையில் சங்கர் அடைக்கப் பட்டார். இந்த நிலையில் தேனி விடுதியில் சங்கருடன் தங்கியிருந்த அவரது கார் டிரைவரான சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த பிரபு (27), உதவியாளரான பரமக்குடியை சேர்ந்த ராஜரத்தினம் (42) ஆகியோரும் இருந்த அறையில் பழனிசெட்டிபட்டி போலீசார் சோதனையிட்டனர். அப்போது, அறையில் கஞ்சா நிரப்பிய சிகரெட்கள், உலோகத்தினாலான கூம்பு வடிவ சிகரெட் நிரப்பும் குழாய்கள், 400 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் தேனி மாவட்ட கூடுதல் எஸ்பி விவேகானந்தன், தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், அறையில் கஞ்சா புகைத்தது உறுதியானது.இதையடுத்து சங்கர், ராம்பிரபு, ராஜரத்தினம் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.