18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் 2 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. 3ம் கட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடக்கிறது. ஏற்கனவே குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றவர்கள் வாபஸ் பெற்றனர். இந்த நிலையில் அங்கு பாஜக வேட்பாளர் முகேஷ் போட்டியின்றி எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்ததாக மகாராஷ்டிரா மாநிலம் இந்தூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அக்ஷய் கண்டி பாம் என்பவர் நிறுத்தப்பட்டார். மே 13ம் தேதி இங்கு 4ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் கண்டி பாம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதுடன் அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் காரில் ஏறி சென்றார். அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகளால் காங்கிரஸ் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
3வதாக இப்போது ஒடிசா மாநிலம் பூரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுச்சரிதா மொகந்தியும், தன்னிடம் தேர்தல் செலவுக்கு பணம் இல்லை என்று கூறி தேர்தல் பிரசாரத்தை நிறுத்தி விட்டதாக காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதி விட்டார். அரசியலில் சேர்ந்து 10 வருடம் சம்பாதித்த பணத்தை செலவு செய்து விட்டேன். இனி என்னிடம் பணம் இல்லை. கட்சி தலைமையும் எனக்கு பணம் தரவில்லை என அவர் கூறி உள்ளார்.
ஒடிசாவில் சட்டசபைக்கும், 21 மக்களவைக்கும் சேர்த்து 4 கட்ட தேர்தல் நடக்கிறது. பூரியில் 6ம் கட்டமாக வரும் 25ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நி்லையில் சுச்சரிதா பின்வாங்கியதில் பாஜகவின் அரசியல் விளையாட்டு இருக்கலாம் என்று பரபரப்புடன் பேசப்படுகிறது. தொடர்ந்து 3 வேட்பாளர்கள் இப்படி நடந்துகொண்ட விவகாரம் காங்கிரசுக்கு பெரும் சறுக்கலாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.