அரியலூர் மாவட்டம், நல்லாம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. கோவில் திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் மாரியம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
திருவிழாவான முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை ஒட்டி காலையில் மாரியம்மனுக்கு 18 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன், பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்று கோஷமுழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர், சிறுதேரில் விநாயகர் முன்னே செல்ல பின் மாரியம்மன் பெரிய தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து மாரியம்மனை வழிபட்டனர். பின்னர் தேர் மாலையில் தேர்கள் கோவிலை வந்தடைந்தது. செந்துறை, உஞ்சினி, சிறுகடம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளமான பக்தர்கள் தேர் திருவிழாவில் பங்கேற்றனர். இரும்புலிக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.