முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மரணத்துக்குப்பின் அவரது சொத்தை முழுமையாக எடுத்துக்கொள்வதற்காகவும், அதற்காக அரசுக்கு வரி செலுத்துவதை தவிர்க்கவும் வாரிசு உரிமை வரியை ராஜீவ் காந்தி ரத்து செய்ததாக பிரதமர் மோடி கூறியிருந்தார். மத்திய பிரதேசத்தின் மொரேனாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசும்போது இந்த குற்றச்சாட்டை மோடி வைத்தார்.
அதே மொரேனாவில் நேற்று நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் பேசிய பிரியங்கா, இந்த குற்றச்சாட்டை மறுத்து பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எனது தந்தை தனது தாயிடம் இருந்து வாரிசு உரிமையாக சொத்தை பெறவில்லை. மாறாக உயிர் தியாகம் செய்வதை தான் தனது தாயிடம் இருந்து வாரிசு உரிமையாக அவர் பெற்றுக்கொண்டார்’ என கூறினார்.
மேலும் அவர், ‘உங்களிடம் 2 எருமைகள் இருந்தால் ஒன்றை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளும் என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தின் தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்காக அவர் கோசாலை கட்ட தயாரா?’ என பிரதமருக்கு சவாலும் விடுத்தார்.