அதைத்தொடர்ந்து பிப்ரவரி 19ம் தேதி தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பிப்.20ம் தேதி தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, பட்ஜெட்கள் மீதான விவாதம் நடந்தது. அதைத்தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் வரும் ஜூன் 2வது வாரம் நடைபெறும் என தெரிகிறது. மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகிறது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பினை வெளியிட்ட பிறகு தேர்தல் ஆணையம் தங்கள் நடத்தை விதிகளை வாபஸ் பெற்றுக்கொள்ளும். ஜூன் 7ம் தேதி வாக்கில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற் கொள்ள வாய்ப்பு உள்ளது.
அதன்பிறகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூடும் தேதியை தமிழக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பார். அநேகமாக ஜூன் 2வது வாரம் சட்டமன்ற கூட்டம் தொடங்கும். அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் கூட்டம் நடத்துவது என முடிவு செய்வார்கள். இந்த கூட்டத் தொடரில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் மற்றும் அமைச்சர்களின் பதிலுரை இடம் பெறும். அநேகமாக 10 நாட்கள் வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிகிறது.