நவகிரகங்களில் தேவகுருவான குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்கின்றார். இந்த ஆண்டு குரு பகவான் கார்த்திகை 1ம் பாதத்தில் மேஷ ராசியில் இருந்து கார்த்திகை 2ம் பாதத்தில் ரிஷப ராசிக்கு இன்று மாலை 5:19 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி குருபகவான் சன்னிதானம் அமைந்துள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. குறிப்பாக ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. ஆபத்சகாயேஸ்வரர் மூலஸ்தான பிரகாரத்தில் உள்ள குருபகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கபட்டு, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து ராஜ அலங்காரத்தில் சிறப்பு வழிபாடுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குருபகவானை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.