இந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சியினர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. டில்லியில் ஆம்ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம்ஆத்மி கட்சி நிர்வாகிகள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு ஊழல் சிக்கி உள்ள ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைத்திருப்பதற்கு டில்லி காங்., தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக டில்லி காங் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி காங்கிரஸ் தலைவர்கள் மேலும் 2 பேர் இன்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். வெளியேறிய இரண்டு பேரும் டில்லியில் இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக இருந்தவர்கள். நீரஜ் பசோயா மற்றும் நசீப் சிங் ஆகிய அந்த இரு தலைவர்களும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எழுதிய கடிதங்களில், கட்சிகளை விட்டு வெளியேறியதற்கு, காரணம் ஊழல் செய்து வரும் ஆம்ஆத்மியுடன் கூட்டணி வைத்திருப்பது தான் என குறிப்பிட்டுள்ளனர். அடுத்தடுத்து நிர்வாகிகள் ராஜினாமா, காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.