திருச்சி மேலகல்கண்டார்கோட்டை காவேரி நகரை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காவேரி நகரில் ஒருவரிடம் இருந்து நிலத்தை வாங்கி அதில் வீடு கட்டி அதில் தற்போது வசித்து வருகிறார். வீடு கட்டப்பட்ட இடம் இன்னும் பழைய ஓனரின் பெயரிலேயே இருந்தது. தேவேந்திரன் பெயரில் பத்திரம் செய்யப்பட்டு விட்டாலும் சம்மந்தப்பட்ட இடம் மாறவில்லை. அதனை தனது பெயருக்கு மாற்றித் தரக்கோரி(எஸ்.எல்.ஆர் ரிப்போர்ட்) தேவேந்திரன், திருச்சி கிழக்கு தாசில்தார் கலைவாணியிடம் கடந்த 2022ம் ஆண்டு விண்ணப்பித்தார். விண்ணப்பத்தில் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார். அதைத்தொடர்ந்து சர்வேயர் வந்து இடத்தை அளந்து பார்த்து தாசில்தாருக்கு அறிக்கையும் அனுப்பி விட்டார். ஆனாலும் தேவேந்திரன் பெயருக்கு எஸ்.எல். ஆர் மாறவில்லை. இது தொடர்பாக தேவேந்திரன் திருச்சி கிழக்கு தாசில்தாரை அலுவலகத்தை தொடர்பு கொண்டார். அப்போது அலுவலகத்தில் இருந்தவர்கள் போங்கள் உங்களுக்கு கடிதம் வரும் அதை எடுத்து வாருங்கள் என கூறினர். இது தொடர்பாக கடந்த 30.11.2022ம் தேதியன்று ஒரு கடிதம் தேவேந்திரனுக்கு வந்தது. மேலும் துணை ஆய்வாளரை தொடர்பு கொண்டு எஸ்எல்ஆர் ரிப்போர்ட்டை பெற்றுக்கொள்ளுமாறு கூறப்பட்டது. இது தொடர்பாக துணை ஆய்வாளர் கோகிலாவை கடந்த 2 வருடங்களில் தேவேந்திரன் நூற்றுக்கணக்கான முறை நேரில் சந்தித்து முறையிட்டும் திருச்சி கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள அலுவலர் கோகிலா எதையும் கண்டுக்கொள்வது இல்லை. அழுத்தி கேட்டால் 2 நாளில் முடிச்சிறலாம் உங்க நம்பர் என்கிட்ட இருக்கு நான் பாத்துக்கிறேன் என கூறுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக புகார் கூறப்படுகிறது. இது தொடர்பாக தேவேந்திரன் தரப்பில் கேட்டதற்கு ஒரு சான்றிதழுக்காக சாதாரண சாமான்ய மக்களை அரசு அதிகாரிகள் 2 வருடமாக அலைக்கழிக்கும் இந்த போக்கை என்னவென்று சொல்வது? ஒரு அதிகாரிக்கு சின்ன பிரச்னை என்றாலும் அவர்கள் சங்கம் தெருவுக்கு வந்து போராட்டம் நடத்துகிறது. சாதாரண மக்களின் தீராத பிரச்னைகளுக்கு பொதுமக்கள் வெளியே வந்து போராடினால் என்ன ஆகும் என்பதை இந்த அதிகாரிகள் ஏன் உணர்வதில்லை என்பது தெரியவில்லை. இப்படிப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்தால் தான் மற்ற அதிகாரிகளுக்கும் இது பாடமாக இருக்கும் என்கின்றனர்.