கர்நாடகாவின் தலைக்காவிரியில் உற்பத்தியாகும் காவிரி தமிழகத்தில் ஒகேனக்கல், மேட்டூர் நகரங்களை கடந்து திருச்சி அருகே உள்ள முக்கொம்பு வரை அகண்ட(ஒரே) காவிரியாக வருகிறது. முக்கொம்பு என்ற இடத்தில் தான் காவிரி மூன்றாக பிரிக்கப்படுகிறது. ஒன்று காவிரியாகவும், இன்னொன்று கொள்ளிடமாகவும், மூன்றாவதாக வாய்க்காலாகவும் பிரிகிறது. அதாவது மூன்று முனைகளாக பிரிவதால் இதற்கு முக்கொம்பு என பெயர் ஏற்பட்டது.
கொள்ளிடம் ஆற்றை உருவாக்கிய 1836ல் தான் இந்த பூங்கா உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். நாளடைவில் இது பல்வேறு வளர்ச்சிகளை கண்டது. ஒரு காலத்தில் தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தலமாக இது விளங்கியது. காவிரி ஆறு மூன்றாக பிரியும் இடத்தில் இந்த பூங்கா அமைந்துள்ளது. இதன் பரப்பு சுமார் 100 ஏக்கருக்கு மேல் இருக்கலாம்.
இங்கு குழந்தைகளை மகிழ்விக்க ஊஞ்சல், சீசா, சறுக்கு விளையாட்டு , படகு குழாம், என பல்வேறு அம்சங்கள் இருந்தன. ஆனால் இன்று அத்தனையும் உடைந்து காயலான் கடைக்கு அனுப்பும் நிலையில் உள்ளது. சறுக்கு விளையாடும் பகுதி, ஓட்டை விழுந்து காணப்படுகிறது. ஒரு இடத்தில் சறுக்கி விளையாடும் பகுதி முட்களைக்கொண்டு அடைத்து வைத்து உள்ளனர். ஊஞ்சல்கள் அனைத்தும் பழுதுபட்டு இருக்கிறது. அதிலும் வரும் மக்கள் ஏறி ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் அந்த ஊஞ்சல் அறுந்து விழும் நிலையில் தான் இருக்கிறது.
செயற்கையாக ஒரு ஏரி அமைத்து அதில் படகு சவாரி செய்யும் விளையாட்டு சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. அதுவும் இப்போது செயல்படவில்லை. அந்த ஏரி புதர் மண்டிக்கிடக்கிறது. சிறுவர்களின் மிக விருப்பமான விளையாட்டு ரயில் சவாரி. அந்த ரயிலும் இப்போது முடங்கி கிடக்கிறது.
சில ராட்டினங்களும், குழந்தைகள் விளையாட்டுகளும் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டு அது மட்டுமே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. தனியார் ராட்டினங்களுக்கு வசூல் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, சீசா போன்றவைகளை முடக்கி விட்டார்கள் என இங்கு சுற்றுலா வரும் மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
நீர்ப்பாசனத்துறைக்கு சொந்தமான இந்த இடத்தில் சுற்றுலாத்துறை இந்த பூங்காவை பராமரித்து வருகிறது. இப்போது இந்த இரண்டு துறைகளும், இந்த பூங்காவையே மறந்து விட்டார்கள் போல. ஆனாலும் மக்கள் இன்னும் முக்கொம்பை மறக்காமல் பழைய நினைவில் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கோடை காலம் தொடங்கி விட்டது. திருச்சி மக்களுக்கு மட்டுமல்லாமல் பக்கத்து மாவட்டகளில் உள்ள மக்களுக்கும் சற்று இளைப்பாற முக்கொம்பு தான் சிறந்த இடம்.
தமிழ்நாட்டின் எந்த பகுதி மக்களாக இருந்தாலும் திருச்சியை கடந்து செல்லும்போது முக்கொம்பை பார்த்து விட்டு செல்லவேண்டும் என்று வருகிறார்கள். ஆனால் இன்று முக்கொம்பு சீர்கெட்டு , களையிழந்து காணப்படுகிறது. ஆனாலும் அங்குள்ள மர நிழலில் சிறிது நேரம் ஓய்வுவெடுத்து செல்ல மக்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இப்போது கோடை விடுமுறை காலம் இந்த நேரத்தில் கூட பூங்காவை சீர் செய்யாவிட்டால் எப்போது சீரமைப்பார்கள் என்ற கேள்விதான் இங்கு வரும் மக்கள் கேட்கும் கேள்வியாக இருக்கிறது.
கடந்த ஆட்சியில் திருச்சியை சேர்ந்த வெல்லமண்டி நடராஜன் தான் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது நீலகிரி ராமச்சந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்த அமைச்சர்கள் குறைந்தபட்சம் இந்த பூங்காவுக்கு ஒரு முறையாவது வந்தது கூட இல்லை என்பது தான் வருத்தமான செய்தி.
இனியாவது இந்த பூங்காவை சீரமைத்து திருச்சி மற்றும் பக்கத்து மாவட்ட மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே திருச்சி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.